Monday, September 7, 2009

நினைவில் நின்ற கவிஞர் வைரமுத்து பேட்டி -எ.ப.அனுபவங்கள் -2

'ஸ்டீரியோ டைப்' ஆகிவிடப் போகிறதே என்கிற கவலையினாலும், 'சினிமா அலெர்ஜி இலவச கொத்தனார்' வீடு தேடி வந்து அடிப்பாரே என்கிற பயத்திலும் சினிமா சம்பந்தமில்லாமல் நான் எழுதிக் கொண்டிருக்கும் சிறுகதையை அடுத்த பதிவாகப் போடுவது என்று தீர்மானித்திருந்தேன். பாலாவிடம் தொலை பேசியில் இதை சொன்னபோது என் கதைகள் மீது நம்பிக்கை இல்லையோ என்னமோ ' கதையா! அது எங்கே சார் போகப் போகிறது! உங்க திரையுலக பத்திரிக்கை உலக அனுபவங்களை போடுங்களேன் சார்! அதுதான் கொஞம் ஸ்வாரஸ்யமாக இருக்கும் அன்று சொல்லிவிட்டார். 'இது என்னடா ந்யூஜெர்சிக்கு வந்த சோதனை' ன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்போ சினிமாவும் இலக்கியமும் கலந்த ஒரு 'எவர் க்ரீன் பேட்டி'யை போட்டால் என்ன என்று நினைத்தேன். இதோ போட்டுவிட்டேன்.

பெரும்பாலான பேட்டிகள் ஒரு சில வாரங்களுக்கு பிறகு பழசாய் போய்விடும். அதை திரும்ப சில மாதங்களுக்கு பிறகு படித்தால் அர்த்தமற்றதாகத் தெரியும். ஆனால் ஒரு சில கேள்விகளும் பதில்களும் எக்காலத்துக்கும் ஏற்றதாய் எப்போது படித்தாலும் அன்றைய நாளிலே பூத்த மலர் மாதிரி fresh ஆக இருக்கும். அப்படிப்பட்ட ஒன்றுதான் 1983ல் நான் எடுத்த கவிஞ்ர் வைரமுத்துவின் பேட்டி. நான் பேட்டியெடுத்த முதல் சில நிமிடங்களில் அவர் மிக்க தலை கனத்தோடு பேசியது போல் எனக்கு தோன்றியது. ஆனால் பேட்டிமுடிந்தபோது 'இதுதான் அவரது பாணி. He is talking with Self Confidence, Passion and Self Conviction என்று உணர்ந்தேன். இந்த பேட்டியுடன் கூட பத்திரிக்கை layout artist குசும்பர்கள் அவரை வெறுப்பேற்றுவது போல ஒரு கார்ட்டூன் வேறு போட்டிருந்தார்கள்.

இப்போது இசைஞானி இளையராஜாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியபடி, A R ரகுமானை தூற்றும் கூட்டம் போல அப்போதும் வேறு ஒரு கூட்டம் இருந்தது. "பாரதிக்குப் பிறகு கண்ணதாசன் ஒருவரே இந்த நூற்றாண்டுக் கவிஞர், வைரமுத்து எல்லாம் போலி, இன்று முளைத்து நாளை உதிர்ந்து போகும் காளான்" என்று நம்பியது. வைரமுத்துவின் ஆரவாரப்பேச்சை கண்டு வெம்பியது. அந்தக் கூட்டத்தில் இருந்த 'அறிவு ஜீவி'களில் நானும் ஒருவன்! ஆனால் காலம் செல்லச் செல்ல மனது பக்குவம் அடைய அடைய, ஒருவரை நேசிப்பதால் ஒரு புதிய திறமையுள்ள, மாற்றுச் சிந்தனை உடைய மற்றவரை இகழ்தல் கூடாதென்ற உண்மை தெரிந்தது. நான் இந்த 25 ஆண்டுகளில் அவ்வப்போது மீண்டும் அந்த பழைய பேட்டியை படித்தபோது வைரமுத்துவின் சிந்தனை கூர்மையையும், சுயநம்பிக்கையையும், பாதை மாறாத அவரது தெளிந்த கொள்கைகளையும் எனக்கு ஆணித்தரமாக உணர்த்தியது. நீங்களும் படித்துப் பாருங்கள். நான் சொல்வது சரியா தவறா என்று பின்னூட்டமிடுங்கள்.

புதுக்கவிதை பிரபலமாக யார் முக்கிய காரணம்?

பால் நிலவுச் சட்டைக்கு காம்பினேஷனாய் கண்ணைக் கதற அடிக்கின்ற வண்ணக் கலவை லுங்கியணிந்து நீல வர்ண உருவத்தில் சூர்யப் புன்னகை எட்டிப் பார்க்க,பட்டி மன்றமாய் பாவித்து, ஏற்ற இறக்கங்களுடன் பதில் சொன்னார் வைரமுத்து.

புதுக்கவிதை என்பது ஓர் இயக்கம்.அதுவும் உலகம் தழுவிய இயக்கம்.தமிழ்நாட்டில் புதுக்கவிதைக்கு நதி மூலம் என்று சொன்னால் பாரதியைத்தான் சொல்ல வேண்டும்.

உபநிடதங்களை மொழி பெயர்க்கிற முயற்சியில் பாரதிக்கு ஒரு சிக்கல் தோன்றியது. அவனுடைய வழக்கமான வடிவங்களான காவடிச் சிந்துக்களும்,கண்ணிகளும் அந்த விஷயங்களை அமர்த்தி வைப்பதற்கு போதுமானவையல்ல என்பது அவன் எண்ணம்! முற்றிலும் உரைநடையில் மொழி பெயர்த்து விடவும் அவன் மனம் ஒப்பவில்லை.

எனவே இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவம் தேவைப்பட்டது;அந்த வடிவத்தைத்தான் புதுக்கவிதைக்கான முயற்சியென்று நாம் சொல்ல வேண்டும்.

பின்னாளில் நா.பிச்சமூர்த்தியும், சி.சு.செல்லப்பாவும் தங்கள் போக்கில் புதுக்கவிதைகளை பயிர் செய்தார்கள். அவர்கள் வளர்த்த பள்ளியின் புதுக்கவிதைகள் மக்களைச் சென்று சேரவில்லை.
புதுக்கவிதைக்கு சமூகப் பிரக்ஞை ஏற்பட்டபோதுதான் அது மக்கள் வடிவமாக மலர்ந்தது. மரபு தெரிந்தவர்களே அப்படி அதை மலரச் செய்தார்கள். அந்த வகையில் நா.காமராசன், அப்துல் ரகுமான்,சிற்பி,மீரா போன்றவர்களே புதுக் கவிதைக்கு ஒரு சமூக அங்கீகாரம் தேடிக் கொடுத்தார்கள். இன்று இளைஞர்களே அந்த வடிவத்தை யாரும் பறிக்கமுடியாத ஆயுதமாக வைத்திருக்கின்றனர்.

புதுக்கவிதை எழுத உங்களை 'இன்ஸ்பையர்' செய்தது யார்?

கவிதையும் புதுக்கவிதையும் வேறு வேறு அல்ல என்பதென் எண்ணம். நான் கவிதை எழுதிக் கொண்டிருந்ததால் புதுக்கவிதை எழுத வந்தேனேயொழிய புதுக்கவிதைக்காக எனக்கு இன்ஸ்பைரேஷன் ஏற்படவில்லை.'வீல்ஸ் ஆஃப் க்ராஸ்'இல் இருந்து ஆரம்பித்து கவிதைகளையும் விமரிசனங்களையும் கற்றுக் கொண்டு வந்தேன். தமிழ்நாட்டில் அந்த நேரத்தில் புதுக்கவிதை விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது. 'இதுவரை நானில்' நான் சொல்லியிருப்பதை போல 'புதுக்கவிதைக்கு'ஆயிரம் கைகள் முளைத்து பண்டிதர்களின் பிடிவாத பீடத்தை அசைக்க ஆரம்பித்தது. 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' என்பது போலவே புதுக்கவிதையும் வளர ஆரம்பித்தது. கவிதைக்கு எனக்கு 'இன்ஸ்பிரேஷன்' என்று சொன்னால் கண்ணதாசனைச் சொல்லுவேன்.


பாடல் என்பது மக்களைச் சென்றடையவேண்டும்! இல்லையென்றால் அந்தப் பாடலுக்கு பெருமையில்லை. கண்ணதாசனைப் பொருத்தவரை அவரது ஒவ்வொரு பாடலும் பாமர மக்கள் ஒவ்வொருவரின் வாயிலும் புரண்டெழுகிறது. உங்கள் பாடல்கள் கரடு முரடென்று 'ஸ்கொயராக' பாமரன், ஏன்! படித்தவன் வாயில் கூட நுழைவதில்லையே?

இந்தக் கருத்தை நானும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது பரிணாமமே தவிர வேறொன்றல்ல!

பாடலின் மொழியை பாத்திரம் தீர்மானிக்கிறது. ஒரு கல்லூரி மாணவன் பாட்டு பாடினால் ஒரு பாடலின் உயரம் அதிகமாக இருந்தாலும் அதில் தப்பு இல்லை. இசை சாம்ராஜ்ஜியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட வார்த்தைகளையெல்லாம் இந்த சாம்ராஜ்ஜியத்தின் பிரஜைகளாக்கும் ப்ரயத்தனத்தில் இருக்கிறேன். ஆனால் பாத்திரம் பாமரப் பாத்திரமாக இருந்தால் என் பாடல் என்றும் அன்னியமாவதில்லை. உதாரணம் 'மலையூர் மம்பட்டியானில்' வரும் "காட்டு வழி போற பொண்ணே', 'மண் வாசனையில்' வரும் 'பொத்தி வச்ச மல்லிய மொட்டு".

ஆனால் அதே சமயத்தில் 'ஈரமான ரோஜாவே' ஒரு பட்டதாரி பாடுகின்ற பாட்டு. அதனால் பாடலின் உயரம் அதிகமாகத்தான் இருக்கும்.

ஜனங்களின் பள்ளத்துக்கு இலக்கியத்தை இறக்கி வருவது மட்டுமல்ல கவிதையின் நோக்கம். இலக்கியத்தின் உயரத்துக்கும் ஜனங்களை இட்டுச் செல்வதுவும்தான். நான் இரண்டையும் செய்துகொண்டிருப்பதாய் எண்ணுகிறேன்!

அது சரி! அதற்காக 'மரபுக் கவிதை மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறது' என்று சொல்ல நீங்கள் யார்?

மரபுக்கவிதை, புதுக்கவிதை இரண்டிலும் வெற்றிகரமாக இருப்பவன் நான். இதை தமிழுலகமே அறியும். அதனாலேயே நாந்தான் அத்தாரிட்டி என்று ஆணவம் பேசமாட்டேன். முதலில் நான் வெளிப்படுத்தியிருப்பது என் ஆதங்கத்தையே தவிரஎன் ஆண்வத்தையல்ல! நான் எல்ல மரபுக்கவிதைகளையும் ஒட்டு மொத்தமாக பழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி அல்ல! கபிலனையும், திருவள்ளுவரையும், திருத்தக்க தேவரையும், கம்பனையும், பாரதியையும், பாரதிதாசனையும், கண்ணதாசனையும் எப்போதும் வணங்குபவன் நான்!

நான் சொல்வதெல்லாம் இறந்த காலத்தின் மரபுக் கவிதைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, நிகழ்கால மரபுக் கவிதைகள் இறந்து கொண்டிருக்கின்றன என்பதுதான் என் எண்ணம். மரபு தன் உள்ளடக்கத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் இன்னும் உயிர் வாழ முடியாது அன் திண்ணமான எண்ணம். அதை இன்னமும் சொல்லுகிறேன்

அதற்காக புத்தகமாய் போடப்பட வேண்டிய புதுக்கவிதை வரிகளை சினிமாப் பாடல்களில் நுழைக்க வேண்டுமா என்ன?

புத்தகத்தில் இருக்கிற பாரதியின், பாரதிதாசனின் பாடல்களை திரைப்படத்தின் திரைப்பாடலாக நுழைக்கும் போது, திரைப்பாடல்கள் மட்டும் ஏன் புத்தகத்தரமாக போகக் கூடாதென்கிறீர்கள்? உங்கள் கருத்துப்படி இலக்கியம் சினிமாப் பாடலாகலாம்; ஆனால் சினிமாப் பாட்டு இலக்கியமாகக் கூடாது! அப்படியோ..??

'ஒரு இந்தியக் கனவிற்காக' என்னுடைய கவிதைத் தொகுப்பான 'திருத்தி எழுதிய தீர்ப்புகளில்' இருந்து எடுக்கப்பட்ட கவிதை திரைப்பாடலானதை தமிழ் சினிமாவின் 'மைல்கல்' என்று சொல்லலாம்.

சினிமாவில் புதுக்கவிதை பாணி தோல்வியுற்றிருக்கிறதென்ற வாதம் பற்றி?

திரை உலகில் திரைப்பாடலில் இன்று ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டிருக்கிறதென்றால் அது புதுக்கவிதையின் வெற்றி என்பதென்றி வேறு இல்லை. மெட்டுக்கு எழுதுகிறபோது ஒரு கவிஞனுக்கு சின்ன சின்ன மீட்டர்தான் கிடைக்கிறது. இந்த மெட்டுக்கள், தங்களுக்குள் வாக்கியங்களை அல்ல- வார்த்தைகளைத்தான் அனுமதிக்கின்றன.

புதுக்கவிதையின் மூலமான படிமங்கள் இல்லையென்றால் இதை சமாளிப்பது சங்கடம். புதுக்கவிதையின் படிமங்கள்தான் இன்று திரைப்பாடலை திருத்தி எழுதியிருக்கிறது.

'தாவணி விசிறிகள் வீசுகிறேன்'

'காதல் என்னை காதலிக்கவில்லை'

'கண்ணீருக்கே நான் தத்துப்பிள்ளை'

'விலகிப் போனால் எனது சதங்கை விதவையாகிப் போகுமே'

'இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்'

'பாதச் சுவடு

தேடி தேடி

கால்கள் ஒய்ந்து போனதே!'

'நாளும் அழுது

தீர்த்ததாலே

கண்கள் ஏழையானதே!'

இந்த மாதிரி நூற்றுக்கணக்கான தொடர்கள் புதுக்கவிதையின் விலாசங்கள், வெற்றியின் விலாசங்கள் என்பது என் ரசிகர்களுக்குத் தெரியும்.

உங்களின் பாடல்கள் பெரும்பாலும் சிச்சுவேஷனுக்குப் பொருந்தாமல் ஒட்டுப் போட்ட கந்தைத்துணியாக இருப்பதென் காரணமென்ன?

திரைப்படத்தில் சொந்தமாக ஒரு கவிஞன் தனியாகப் பாடல் எழுதி விட முடியாது. என்னுடைய எல்லாப் பாடல்களும் சிச்சுவேஷன் சொன்னவர்களின் ஒப்புதல் பெற்றே 'ரெக்கார்ட்' செய்யப்படுகின்றன. சில பாடல்கள் சொல்லப்பட்ட சிச்சுவேஷனுக்கு மாறாக எடுக்கப்பட்டு விடும். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.

திரும்பத் திரும்ப மோகம், மேகம், தாகம்.. இப்படி சில வார்த்தைகளையே உங்களின் அநேக பாடல்களில் நீங்கள் உபயோகப்படுத்தி இருப்பதை கவனிக்கும்போது உங்களின் தமிழ் 'ஒக்காபுலரி' குறைவோ என்கிற சந்தேகம் எழுகிறதே?

ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஒரு குறிப்பிட்ட சொல்லின் மீது எனக்கு மயக்கமிருக்கும். அந்த வார்த்தை என்னை துரத்திக்கொண்டே வந்து என்னை ஆண்டு கொண்டேயிருக்கும். சங்கீதத்திற்கு மேகம், மோகம், என்பதெல்லாம் மிக சுகமான வார்த்தைகள். எனக்கு தோன்றுகிறபோது அந்த வார்த்தைகளை விட்டு வெளியே வந்து விடுகிறேன். ஆரம்பத்தில் என் விலாசம் சொல்ல வேண்டுமென்பதற்காக சில வார்த்தைகளின் சேவகத்தை நாடியிருக்கிறேன் என்று சொல்லலாம்.

எதற்கெடுத்தாலும், யாரை வேண்டுமானாலும் நீங்கள் பாரதியோடு ஒப்பிட்டு விடுகிறீர்கள் (உதாரணம்: ஏ.வி.எம் - பாரதி கம்பேரிசன், பாவலர் வரதராஜன் - பாரதி கம்பேரிசன்) இப்படி பல இடங்களில் பாரதியை சீப்பாக்கி விடுகிறீர்களே! இது ஏன் என்று கேட்பவர்களுக்கு உங்கள் பதில் என்ன?

கருத்து பாமரனுக்கு போய் சேர வேண்டுமென்றால் பாமரனுடைய இலக்கிய வடிவத்தை கையாள வேண்டும் என்பது பாரதியின் இலக்கிய வடிவக் கொள்கை. அந்தக் கருத்தையே பாவலர் வரதராஜன் கொண்டிருக்கிறார், கையாண்டுமிருக்கிறார். விடுதலை வருவதற்கு முன்பே எத்தனை படத் தயாரிப்பாளர்கள் இருக்க அது வியாபரத்திற்குதான் என்ற போதிலும் அதை பயன்படுத்துகிற துணிச்சல் ஏ.வி.எம் க்குதானே வந்தது! அதைத்தான் பாராட்டிச் சொன்னேன். உண்மைக்கு வேறுவிதமாக உரையெழுதி விடுகிறார்கள்.

சினிமாவுக்கு அப்பாற்பட்ட வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறீர்களா?

என்னுடைய பத்தொன்பதாவது வயதில் 'வைகறை மேகங்கள்' என்கிற நூல் வந்தது. அதுதான் தமிழுலகத்திற்கு கவிழன் என்றென்னை அறிமுகப்படுத்தியது. 1979ல் 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' வெளிவந்தது. அதுதான் திரு.பாரதிராஜா மூலம் திரைப்படத்திற்கு அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு 'இன்னொரு தேசிய கீதம்' , 'கவிராஜன் கதை' இவை இரண்டும் தமிழுலகத்தில் ஒரு பாதிப்பை நிகழ்த்தின. இப்போது என் 'ஜன்னலின் வழியே' என்கிற என் கலையுலக கட்டுரைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. 'இதுவரை நான்' விரைவில் நூல் வடிவில் கிடைக்கும். அடுத்து 'கொடிமரத்தின் வேர்கள்' எனும் புதுக்கவிதை தொகுதியும், 'ராத்திரி வெய்யில்' என்கிற எனது மரபுக்கவிதை தொகுதியும் வெளிவரவிருக்கின்றன. 'கரிபால்டியின் காதல் வரலார்றை' தமிழில் கவிதை நாடகமாக எழுதியிருக்கிறேன். என் புலன்கள் எனக்கு சம்மதிக்கும் காலம் வரை நான் எழுதிக்கொண்டேயிருப்பேன்.

புதுக்கவிதைக்குப் பிறகு பிற்காலத்தில் எந்தவிதமான கவிதைகள் தோன்றும்?

புதுக்கவிதை என்பது உரைநடையின் நாகரீகக் குழந்தை. எந்த ஒரு கலை வடிவமும் அந்தந்த யுகத்து மனிதனின் தேவைகளை தீர்த்து வைப்பது வரைக்கும் நிலைக்கும். எதிர்காலத்தில் கவிதைகளின் தேவைகள் கூட தீர்ந்து போகலாம். அப்போது வெற்றிடத்தை நிரப்புவதற்கு ஒரு புதிய வடிவம் புறப்பட்டு வரலாம். அதை காலம்தான் கணிக்கும்

இடையில் கேட்கப்பட்ட 'நீங்கள் இளையராஜாவின் திறமையில் குளிர் காய்கிறீர்கள்" என்பது போன்ற கேள்விகளை "ச! ச! இந்த நல்ல பேட்டியின் நடுவே எதற்கு அபஸ்வரம்?' என்று சொல்லி அவைகளுக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டு, பெய்கிற மழையின் நடுவே நனையாமல் செல்கிற சாதுர்யத்தோடு மற்ற கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார் வைரமுத்து.

என்னை சகித்து பதில் சொன்னதற்கு நான் அவரிடம் நன்றி சொல்லி விடை பெறும் போது 'ஒரு நிமிடம் இருங்கள்' என்று சொல்லி அவரது 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' புத்தகத்தை அடுத்த அறையிலிருந்து எடுத்து வந்து தன் கையெழுத்திட்டு கொடுத்து என்னை வாழ்த்துக்களுடன் வழியனுப்பினார் கவிஞர் வைரமுத்து.

11 comments:

ஆயில்யன் said...

கொஞ்சம் டெரராய் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சாதாரணமாய் பதிலளித்துவிட்டிருந்த வைரமுத்து பற்றி பொதுவான பார்வையே ஒரு கர்வம் நிறை கவிஞன் என்பதாகவே இருந்து, அதற்கேற்றார்போலவே கார்ட்டூன் (ஸ்கேனர்) கைவண்ணமும் இருந்திருக்கிறது!

பேட்டிக்கு பிறகான எதிர்வினைகள் சொல்ல இருக்கிறதா :))))

ஆயில்யன் said...

படம் வரைந்து பாகங்களை குறி கலக்கல் கான்செப்ட் :))

டகிள் பாட்சா said...

அடேங்கப்பா ஆயில்யன். உங்கள் வேகம் கண்டு வியந்தேன். நன்றி. இது போன்ற சில ஸ்பெஷல் பேட்டிகள் 'திரைச்சுவை' என்ற பத்திரிக்கையில் வெளியாயின. இந்த கார்ட்டூன் போட பப்ளிஷர், ஆசிரியர் 'குடிசை' ஜெயபாரதி, உதவி ஆசிரியர் ரமேஷ் (ரப்பர் வாயன்)லே அவுட் ஆர்ட்டிஸ்ட் / ஓவியர்கள் லேனா, மற்றும் கோபால் (ஆமாங்க நம்ம நக்கீரன் கோபால்தான். ஆரம்ப காலத்துல அவர் ஆர்ட்டிஸ்ட், போட்டோகிராபர் எல்லாம்தான்) ஒன்று கூடி Brainstorming செய்து இது போன்ற ஸ்கேனர் கார்ட்டூன் concept & content ஐ முடிவு செய்வோம். பிறகு லேனாவோ, கோபாலோ சித்திரமாக தீட்டி விடுவார்கள். வாராவாரம் ஒரு பேட்டி, ஒரு கார்ட்டூன்.

Anonymous said...

சுவாரஸ்யமான பேட்டி - நன்றி :)

//'ராத்திரி வெய்யில்' என்கிற எனது மரபுக்கவிதை தொகுதி//

//'கரிபால்டியின் காதல் வரலார்றை' தமிழில் கவிதை நாடகமாக எழுதியிருக்கிறேன்//

இந்த இரண்டும் புத்தகமாக வரவில்லையோ?

ஒருவேளை, ‘ராத்திரி வெய்யில்’ என்பது ‘என் பழைய பனையோலைகள்’ என்று பெயர் மாறியிருக்கலாம், அது வைரமுத்துவின் மரபுக் கவிதைத் தொகுப்புதானே?

- என். சொக்கன்,
பெங்களூர்.

enRenRum-anbudan.BALA said...

நன்றி, டகிள் !

நல்ல சுவாரசியமான பேட்டி, வைரமுத்துவின் கருத்துகள் நேர்மையாக உள்ளன.

என்ன, கேள்விகளெல்லாம் ஒரு டைப்பா இருக்கு ;-)

அன்புடன்
பாலா

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

எடக்கு மடக்கான, துடுக்குத்தனமான கேள்விகள் - எரிச்சல் படாத, ஆணவமில்லாத ஆனால் கொஞ்சம் ரப்பர் பதில்கள் - பல வருடங்களுக்கு முன்பு பதிவான பேட்டி என்ற நினைவோடு படித்தேன்.

SRK said...

நல்ல கேள்விகள். இவருடைய இது வரை நான் மிகவும் பாதித்தது.

டகிள் பாட்சா said...

சொக்கன்: நன்றி. இங்கு வந்தபிறகு அவரது சினிமா பாடல்களை தவிர மற்றவற்றை நான் கவனிக்க நேரமில்லை

பாலா : எடக்கு முடக்கா கேள்வி கேக்கறதுதானே நம்ம வேலை

ராம்: அவரது பேட்டியிலும் சொற்களிலும் ஆழமான அர்த்தம் இருக்கும். ஆனால் அவரது Tone கொஞ்சம் தலைகனம் பிடித்தவர் என நினைக்கத் தோன்றும். அவருக்கு பிடிக்காத மேலும் சில கேள்விகளை கேட்டபோது ‘ கொண்டு வந்து எப்படியாவது நொட்டிடுவீங்களே’ என்றார். அதை நான் எழுதவில்லை

SRK : நன்றி. இந்த திரும்பி பார்க்கிறேன் போன்ற போஸ்டிங்கை சற்றே நிறுத்தி வேறே உருப்படியாக ஏதாவது போஸ்டிங் செய்ய எண்ணியிருக்கிறேன்

(Mis)Chief Editor said...

உங்களைப் போன்று நானும் கண்ணதாசனைக் காதலிப்பவன்!
என்றாலும், வைரமுத்துவின் பேட்டி அருமை!

அருமைக்கு மிக முக்கியமான காரணம் கேட்கப்பட்ட கேள்விகள்!
வாழ்த்துக்கள் ட. பாட்சா!

டகிள் பாட்சா said...

Mr.Mischief: நீங்கள் பெங்களூர் என்று உஙகள் ப்ளாக் சொல்லுதே ஒரு வேளை சொக்கனாக இருக்குமோ என்று நினத்தேன். நீங்கள் என் வலைப் பதிவுக்கு வந்தது எப்படி? யாராச்சும் சொன்னாங்களோ?

(Mis)Chief Editor said...

பாஸ்டன் பாலா அவர்களால் நேர்ந்த விபத்து!
(உங்களைச் சந்திக்க நேர்ந்தது)